மருத்துவமனையில் படுக்கை கேட்டு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டு முன்பு கொரோனா நோயாளியுடன், குடும்பத்தினர் தர்ணா-ஆம்புலன்சில் செல்லும் வழியில் உயிர் பிரிந்த பரிதாபம்

மருத்துவமனையில் படுக்கை கேட்டு கொரோனா நோயாளியுடன் அவரது குடும்பத்தினர் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். படுக்கை கிடைத்தும் ஆம்புலன்சில் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-05-06 19:19 GMT
பெங்களூரு:
மருத்துவமனையில் படுக்கை கேட்டு கொரோனா நோயாளியுடன் அவரது குடும்பத்தினர் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். படுக்கை கிடைத்தும் ஆம்புலன்சில் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 கொரோனா பரவல்
பெங்களூருவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமலும், ஆக்சிஜன் கிடைக்காமலும் கொரோனா நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். மருத்துவமனையில் படுக்கை கிடைக்காததால் சரியான சிகிச்சை கிடைக்காமல் பெங்களூருவில் ஏராளமான கொரோனா நோயாளிகள் பலியாகி வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா நோயாளிக்கு மருத்துவமனையில் படுக்கை கேட்டு முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டு முன்பு குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூச்சு திணறல்
பெங்களூரு அருகே ராமோஹள்ளியை சேர்ந்தவர் சதீஸ் (வயது 46). இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சதீஸ் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்காக அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சதீசுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, சதீசை, அவரது மனைவி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். படுக்கை வசதி இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து விட்டது. 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு சென்றும் சதீசுக்கு படுக்கை கிடைக்கவில்லை. இதனால் சதீஸ் இருந்த ஆம்புலன்சுடன், பெங்களூரு குமரகிருபா ரோட்டில் உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டுக்கு, அவரது குடும்பத்தினா் நேற்று காலையில் வந்தனர்.
எடியூரப்பா வீட்டு முன்பு...
பின்னர் அவர்கள் சதீஸ் உயிருக்கு போராடுவதால், மருத்துவமனையில் படுக்கை ஒதுக்க வேண்டும் என்று கோரி, அவரது குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதை பார்த்தும் அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்து விட்டு படுக்கை கொடுத்தால் தான் செல்வோம் என்று போலீசாரிடம் கூறிவிட்டு தர்ணாவில் ஈடுபட்டனா.
இதையடுத்து, சதீசுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள். பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் சதீசுக்கு படுக்கை கிடைத்தது. உடனே முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
நோயாளி சாவு
இந்த நிலையில், மருத்துவமனையில் சதீசை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டு சதீசின் மனைவி, குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்கள். சரியான நேரத்தில் படுக்கை கிடைக்காததாலும், தனது கணவருக்கு சிகிச்சை கிடைக்காத காரணத்தாலும் அவர் உயிர் இழந்திருப்பதாகவும், இதற்கு அரசே காரணம் என்று மனைவி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
முதல்-மந்திரி வீட்டு முன்பு படுக்கைக்காக குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, படுக்கை கிடைத்தும் கொரோனா நோயாளி பலியான சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்-மந்திரி வீட்டை சுற்றி வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனா். 
இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக முதல்-மந்திரி வீட்டு முன்பு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல பெங்களூரு விதான சவுதா முன்பும் கொரோனா நோயாளி இருந்த ஆம்புலன்சை நிறுத்தி படுக்கை கேட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்