கொரோனா அதிகரிப்பு எதிரொலி: ஷீரடி சாய்பாபா கோவில் மூடல்

மராட்டியத்தில் கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது.

Update: 2021-04-05 22:25 GMT
ஷீரடி, 

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு விண்ணை முட்டும் அளவுக்கு அதிவேகமாக அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு ஊரடங்கு மற்றும் பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்திபெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் நேற்று இரவு முதல் மூடப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ சாய்பாபா சான்ஸ்தான் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திர தாக்கரே கூறுகையில், “கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிலின் பக்தர்கள் தங்குமிடம் மற்றும் அன்னதான கூடமும் மூடப்பட்டு இருக்கும். இருப்பினும் கோவிலுக்குள் தினமும் வழக்கமான பூஜை நடைபெறும்” என்றார்.

மேலும் செய்திகள்