முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கு கொரோனா
ஆபாச வீடியோ விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக கோரி போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்த நிலையில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர், கோகாக் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
ஆபாச வீடியோ விவகாரம்
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாச வீடியோ விவகாரம் குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளம்பெண் கடந்த 30-ந் தேதி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து, அவரிடம், சிறப்பு விசாரணை போலீசார் கடந்த 6 நாட்களாக விசாரித்து தகவல்களை பெற்றுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியிடம் போலீசார் 3 முறை விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருந்தார்கள்.
போலீசார் நோட்டீசு
ஆனால் இளம்பெண் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலம், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து ரமேஷ் ஜார்கிகோளியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தார்கள். இதற்காக கடந்த 2-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ரமேஷ் ஜார்கிகோளிக்கு சிறப்பு விசாரணை குழு போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனர். அன்றைய தினம் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
ரமேஷ் ஜார்கிகோளிக்கு காய்ச்சல் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக 2 நாட்கள் காலஅவகாசம் வழங்கும்படி போலீசாரை சந்தித்து, அவரது வக்கீல் ஷியாம் சுந்தர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட போலீசார், 5-ந் தேதி (அதாவது நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி ரமேஷ் ஜார்கிகோளிக்கு மீண்டும் ஒரு நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனர். இதன் காரணமாக நேற்று அவர் விசாரணைக்கு ஆஜராவாரா?, இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் ரமேஷ் ஜார்கிகோளி
அதே நேரத்தில் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானால் ரமேஷ் ஜார்கிகோளி கைது செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியானது. இதையடுத்து, போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும் முன்பாக கோர்ட்டில் முன்ஜாமீன் பெறுவதற்கு ரமேஷ் ஜார்கிகோளி திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று விசாரணைக்கு ரமேஷ் ஜார்கிகோளி ஆஜராவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் கொரோனா காரணமாக பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ரமேஷ் ஜார்கிகோளி அனுமதிக்கப்பட்டுள்ளார். ரமேஷ் ஜார்கிகோளிக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருப்பதால், அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிச்ைச பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ரமேஷ் ஜார்கிகோளி விசாரணைக்கு ஆஜராகவில்லை.
நாடகமாடுவதாக குற்றச்சாட்டு
இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டிய இருப்பதாலும், ஆபாச வீடியோ விவகாரத்தில் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்தும் ரமேஷ் ஜார்கிகோளி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறி நாடகமாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியினர் மற்றும் இளம்பெண்ணின் வக்கீல் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை கோகாக் தாலுகா ஆஸ்பத்திரி டாக்டர் ரவீந்திரா மறுத்துள்ளார். இதுகுறித்து கோகாக்கில் நேற்று டாக்டர் ரவீந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கொரோனா தொற்று உறுதி
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கடந்த 31-ந் தேதி அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி வந்தார். அவரை பரிசோதனை செய்த பார்த்தபோது, காய்ச்சல் இருப்பது முதலில் தெரிந்தது. பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. என்றாலும், அவரது உடல் நிலை ஆரோக்கியமாக இருந்ததால் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் ஜார்கிகோளி பெங்களூரு மற்றும் மராட்டிய மாநிலத்திற்கு சென்று வந்ததாக தெரிவித்திருந்தார். மராட்டிய மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகஅளவில் இருப்பதால், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்பதை உறுதி செய்துள்ளோம். இதற்கிடையில், நேற்று இரவு (அதாவது நேற்று முன்தினம்) ரமேஷ் ஜார்கிகோளி மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
ரத்த அழுத்தம் அதிகம்
அப்போது அவருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு காய்ச்சல் மற்றும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பதால் இரவு 10.30 மணியளவில் தீவிர சிச்ைச பிரிவில் ரமேஷ் ஜார்கிகோளி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எனது தலைமையிலான டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறோம்.
ரமேஷ் ஜார்கிகோளி இன்னும் 3 அல்லது 4 நாட்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருப்பார். அதன்பிறகு, அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார். அதைத்தொடர்ந்து, மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு வாரம் ஆஜராக...
ஆபாச வீடியோ விவகாரத்தில் கடந்த 30-ந் தேதியில் இருந்து நேற்று வரை இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ரமேஷ் ஜாா்கிகோளிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் இன்னும் ஒரு வாரம் அவர் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், ரமேஷ் ஜார்கிகோளியின் கார் டிரைவர் மற்றும் வீட்டு வேலைக்காரர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
ஆஸ்பத்திரியில் ரமேஷ் ஜார்கிகோளி இல்லை
ரமேஷ் ஜார்கிகோளிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறித்து இளம்பெண்ணின் வக்கீல் ஜெகதீஷ் நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆபாச வீடியோ விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்த நிலையில், ரமேஷ் ஜார்கிகோளிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்படுவதை நம்பவில்லை. அது முற்றிலும் பொய். எனது நண்பர் பெலகாவியில் வக்கீலாக இருக்கிறார். அவர், கோகாக் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தார். ஆஸ்பத்திரியில் ரமேஷ் ஜார்கிகோளி இல்லை. இதன் மூலம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்பதற்காக கொரோனா இருப்பதாக கூறி ரமேஷ் ஜார்கிகோளி நாடகமாடுவது தெரியவந்துள்ளது. இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்திருப்பதால், உடனடியாக ரமேஷ் ஜாா்கிகோளியை போலீசார் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ வெளியிட்ட அரசு டாக்டர்
ரமேஷ் ஜார்கிகோளிக்கு கொரோனா பாதிப்பு இல்லை, அவர் கோகாக் அரசு ஆஸ்பத்திரியில் இல்லை என்று தகவல் வெளியானது. இதனை கோகாக் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ரவீந்திரா மறுத்துள்ளார். மேலும் ரமேஷ் ஜார்கிகோளி கோகாக் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வீடியோவையும் டாக்டர் ரவீந்திரா நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில், கோகாக் அரசு ஆஸ்பத்திரியில் முகக்கவசம் அணிந்தபடி ரமேஷ் ஜார்கிகோளி படுத்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து, டாக்டர் வௌியிட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.