கொரோனா தடுப்புப்பணிகள்: மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஹர்ஷ் வர்தன் நாளை ஆலோசனை

கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2021-04-05 12:28 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

தொடர்ந்து நான்கு நாட்களாக உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 1 லட்சத்துக்கும் மேலானோருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக ஒரேநாளில் 1 லட்சம் பாதிப்புகளை எட்டிய மூன்றாவது நாடானது இந்தியா. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 067 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே மகாராஷ்ட்ரா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாளை மாலை 6.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டில் நிலவும் கொரோனா சூழல் குறித்து, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்களுடனான உயர்மட்ட சந்திப்புக்கு அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்