புதுச்சேரி பா.ஜ.க. வேட்பாளர் நமசிவாயத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி
புதுச்சேரியில் மண்ணடிபேட்டை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நமசிவாயம் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும். தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
அரசியல் கட்சிகளும் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட பிரசார பணிகளில் ஈடுபட்டன. தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக தேர்தல் ஆணையமும் செயல்பட்டு வருகிறது.
இதற்காக கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் பா.ஜ.க. சார்பில் மண்ணடிபேட்டை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மந்திரியான வேட்பாளர் நமசிவாயம் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். இதனை முன்னிட்டு அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். பாதுகாப்புடன் இருக்கும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.