நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி அடைவார்: பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் - அமித்ஷா பேச்சு
நந்திகிராம் தொகுதியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தோல்வி அடைவார் என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கூச்பெஹர்,
5 மாநில சட்டசபை தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தின் நந்திகிராம் தொகுதி, நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த தொகுதியில்தான் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து, அவரது நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக இருந்து, இப்போது பா.ஜ.க.வுக்கு தாவியுள்ள சுவேந்து அதிகாரி களம் இறங்கி உள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் வீழ்த்த சபதம் செய்துள்ளனர்.
மம்தா பானர்ஜி, சக்கர நாற்காலியில் வலம் வந்து வாக்கு சேகரிக்க, அவருக்கு எதிராக பிரதமர் மோடி தொடங்கி மத்திய மந்திரிகள் பலரும் பிரசாரம் செய்தனர். நேற்று மேற்குவங்காளத்தில் 2-வது கட்ட தேர்தலை சந்தித்த 30 தொகுதிகளில் இந்த தொகுதி முதன்மையானது.
3ம் கட்டத் தேர்தல் ஏப்.,6ல் நடக்க உள்ளது. இந்தநிலையில், கூச்பெஹர் மாவட்டத்தில் உள்ள சித்தால்குச்சி நகரில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதி எல்லையில், எல்லை தாண்டி சட்டவிரோதமாக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இதை திரிணமுல் அரசு ஒருபோதும் தடுத்து நிறுத்தாது. எங்களால் மட்டுமே அது முடியும்.
மம்தா பானர்ஜி மிரட்டிப் பணம் பறித்தல், சர்வாதிகாரம், மற்றவர்களைச் சமாதானப்படுத்துதல் ஆகிய ஆயுதங்கள் மூலம் தான் ஆட்சி நடத்தி வருகிறார். இந்தத் தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி பாஜக அரசு ஆட்சி அமைக்கும். நந்திகிராமில் மம்தாவின் குண்டர்களால் எதுவும் செய்ய முடியவில்லை
இதுவரை நடந்த முதல் இரு கட்டத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். மம்தா நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைவார். தொகுதியின் வளர்ச்சிக்கு மம்தா எதுவும் செய்யவில்லை. கூச்பெஹர் மாவட்டத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்குவோம். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை இங்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் பயன்படும் வகையில் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.