கொல்கத்தா தீ விபத்து பலி 9 ஆக உயர்வு; மத்திய மந்திரி இரங்கல்

கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-03-09 01:07 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ள பல அடுக்கு கட்டிடம் ஒன்றில் திடீரென நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.  இதுபற்றிய தகவலறிந்து, 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றன.  அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமுடன் ஈடுபட்டனர்.

அந்த கட்டிடத்தின் 13வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  இதுபற்றி தீ மற்றும் அவசரகால சேவையை சேர்ந்த சுஜித் போஸ் கூறும்பொழுது, குறைந்த அளவே இடவசதி உள்ளது.  அதனால் ஏணியை வைப்பதற்கு கூட சிரமம் ஏற்பட்டு உள்ளது என கூறினார்.

எனினும், தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளது.  இதுபற்றி முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறும்பொழுது, இது மிகவும் வருத்தத்திற்குரியது.  உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.  அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயெல் கூறும்பொழுது, தீ விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள், 2 ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஒரு காவல் துறை அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் மரணத்திற்கு அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த துரதிர்ஷ்டவச தீ விபத்தில் மாநில அரசுக்கு அனைத்து சாத்தியப்பட்ட உதவிகளும் வழங்கப்படும்.  ரெயில்வே துறையின் 4 முக்கிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களை கொண்டு உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உறுதி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்