கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் மும்பையில் ஊரடங்கு அமலாகும்
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில், தலைநகர் மும்பையிலும் தினசரி பாதிப்பு 1,000-யை தாண்டி இருக்கிறது.
மும்பை,
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் மும்பையில் பகுதி நேர ஊரடங்கு அமலாகும் என்று மந்திரி அஸ்லம் சேக் கூறினார்.
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில், தலைநகர் மும்பையிலும் தினசரி பாதிப்பு 1,000-யை தாண்டி இருக்கிறது.
மும்பையில் மின்சார ரெயில்கள் ஓட்டம் மற்றும் கொரோனா அச்சமின்றி மக்களின் நடமாட்டம் ஆகியவை தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் மும்பை நகரில் பகுதிநேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மந்திரி சபையில் ஆலோசனை நடத்தப்பட்டதாக மும்பை மாவட்ட பொறுப்பு மந்திரி அஸ்லம் சேக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மும்பையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து மந்திரி சபையில் ஆலோசிக்கப்பட்டது. பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவலை தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக முககவசம் அணியாதவர்கள், திருமணங்கள், கேளிக்கை விடுதிகளில் அதிக பேர் கூடினால் அபராதம் விதிக்கப்படும்.
கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதுடன், தடுப்பூசியை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு மையங்களில் தனிமைப்படுத்துதல் அதிகரிக்கப்படும். இதிலும் பாதிப்பு கட்டுக்கு வராமல் தொடர்ந்து அதிகரித்தால் இறுதியாக பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பகுதி நேர ஊரடங்கு என்பது இரவு வேளை அல்லது வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.