கர்நாடகத்தில் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்த புகாரில் கனிம வளத்துறை அதிகாரி பணி இடைநீக்கம்
கர்நாடகத்தில் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் கனிம வளத்துறை அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
பாகல்கோட்டை மாவட்ட கனிம வளத்துறையில் அதிகாரிகள், கல் குவாரி நடத்தும் உரிமையாளர்களிடம் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக அந்த துறை மந்திரி முருகேஷ் நிரானிக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணை அடிப்படையில் ஏற்கனவே பாகல்கோட்டை கனிம வளத்துறை அதிகாரி பயாஸ் அகமது சேக் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கனிம வளத்துறை துணை இயக்குனர் லிங்கராஜூ அதிகளவில் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் ஒரு கல்குவாரி நடத்தும் உரிமையாளரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வழங்குமாறு கேட்டு தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்ததாக மந்திரி முருகேஷ் நிரானி கூறினார். இந்த விசாரணை அடிப்படையில் அதிகாரி லிங்கராஜூ பணி இடைநீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.