திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படுமா? மத்திய அரசு பதில்
திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படுமா என்ற உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்து உள்ளது.
புதுடெல்லி
திருமணம் அல்லது ஏமாற்றி, கட்டாயமாக மதம் மாற்றுவோருக்கு 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத்தை உத்தரபிரதேசமும் மத்திய பிரதேசமும் சமீபத்தில் கொண்டு வந்துள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்கனவே அத்தகைய சட்டம் உள்ளது.
மாநிலங்களால் இயற்றப்பட்ட இந்த சட்டங்கள் அவற்றின் தவறான பயன்பாட்டிற்கான பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன. வெறும் புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் தம்பதியினரை துன்புறுத்துவதாக பரவலான தகவல்கள் வந்துள்ளன. இந்து பெண்களை திருமணம் செய்ததற்காக முஸ்லிம் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இது போன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டுவருமா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி எழுத்துபூர்வமான பதிலில் இல்லை என கூறி உள்ளார்.
மத மாற்றங்கள் அல்லது மதங்களுக்கு எதிரான திருமணங்களுக்கு எதிராக மத்திய சட்டத்தை கொண்டுவருவதற்கான எந்த நோக்கமும் இப்போது அரசாங்கத்திற்கு இல்லை என்று மக்களவையில் இன்று தெரிவித்து உள்ளார்.