என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை; தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்; புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி

என் மீது உண்மைக்கு புறம்பாக குற்றஞ்சாட்டி உள்ளனர். வரும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று நாராயணசாமி கூறினார்.

Update: 2021-02-01 22:01 GMT
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி
உண்மைக்கு புறம்பானவை

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் பா.ஜ.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உண்மைக்கு புறம்பான பல தகவல்களை கூறியுள்ளார். எந்த ஒரு தகவலும் தெரியாமல் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். யாரோ எழுதி கொடுத்ததை அவர் பேசியுள்ளார். ஒரு தேசிய தலைவர் இவ்வாறு பேசுவது சரியாக இல்லை.

புதுவை மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கி வந்த 70 சதவீதம் மானியம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வெளிச்சந்தையில் கடன் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அப்போது காங்கிரஸ் கட்சியில் முதல்-அமைச்சராக இருந்த ரங்கசாமி தான் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் தான் மானியம் குறைந்துள்ளது.

புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் இடங்களை பெற எங்கள் அமைச்சரவையில் முடிவு செய்து கடந்த ஏப்ரல் மாதம் கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கோப்பிற்கு அனுமதி வழங்காமல் 2 மாதம் தனது கையிலேயே வைத்து விட்டு பின்னர் மத்திய அரசுக்கு கோப்பை அனுப்பி வைத்துள்ளார். தற்போது அந்த கோப்பு மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது.

மில்களை மூடியது யார்?
புதுவையில் ரோடியர், சுதேசி, பாரதி மில்களை மூடியது யார்? தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க வேண்டும் என்று அமைச்சரவையில் முடிவு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பி 
வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர் அனுமதி வழங்காமல் எங்களுக்கு தெரியாமலேயே மத்திய அரசுக்கு கோப்பை அனுப்பி விட்டார். மத்திய அரசு இது குறித்து எங்களிடம் விளக்கம் கேட்டது. 

நாங்கள் விளக்கம் அளிக்கும் முன்பாகவே மில்லை முழுவதுமாக மூட கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். 3 மில்களிலும் இது நான் நடந்தது. இதற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்.

புதுவையில் ரே‌‌ஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. கவர்னர் கிரண்பெடி அரிசிக்கு பதிலாக பணமாக பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறினார். ரே‌‌ஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினால் அதற்கும் கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. ரே‌‌ஷன்கடைகள் மூடிக்கிடக்கின்றன. இதற்கு ஆட்சியாளர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்.

நிரூபிக்க முடியுமா?
புதுவை மாநிலத்தில் அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்கினால் கவர்னர் அதற்கு ஒப்புதல் தரவில்லை. மாறாக அந்த நிதியை பி.எப். நிதிக்கு ஒதுக்கும்படி உத்தரவிடுகிறார். என்னிடம் அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. எனவே உண்மையை யாராலும் மறைக்க முடியாது. நான் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு கடிதம் எழுதி அவர் என் மீது தெரிவித்த புகார்களை நிரூபிக்க முடியுமா? என்று கேட்பேன். இது ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு அழகல்ல.

மக்களிடம் அரசுக்கு தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு கவர்னர் செயல்பட்டு வருகிறார். புதுவை மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது. மக்கள் பா.ஜ.க. கூட்டணியை புறக்கணிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்