கடந்த ஆண்டில் ரூ.1,500 கோடி கடத்தல் பொருட்களை பிடித்த கடலோர காவல் படை
கடலோரத்தில் இருந்து 200 கடல் மைல் தொலைவு வரை உள்ள பகுதி, பிரத்யேக பொருளாதார மண்டலமாக கருதப்படுகிறது. இந்த மண்டலத்துக்குள் கண்காணிப்பு பணியை மேற்கொள்வது, கடலோர காவல் படையின் பொறுப்பு ஆகும்.
இந்த பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் கடந்த ஆண்டில் ரூ.1,500 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்களை பிடித்திருப்பதாக கடலோர காவல் படை நேற்று ஒரு அறிக்கை மூலம் தெரிவித்தது.
அதில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-
சட்டவிரோதமாக சுற்றிய 10 வெளிநாட்டு மீன்பிடி படகுகளையும், 80 குற்றவாளிகளையும் பிடித்துள்ளோம். கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி, இந்த கடத்தல் சம்பவங்கள் நடந்தன.
நாங்கள் தினந்தோறும் 50 கப்பல்கள் மற்றும் 12 விமானங்கள் மூலம் கண்காணித்து வந்தோம். அத்துடன், கடந்த ஆண்டு 11 புயல்கள் வீசியபோது, 6 மீன்பிடி படகுகளையும், 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களையும் பத்திரமாக கரை சேர்த்தோம். இதனால், உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் தவிர்க்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.