இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்
இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஆயத்தப்பணிகளை பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டும் வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து சில முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் விரைவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்ட்யூட் ஆப் இந்தியா மற்றும் பைசர் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் வரும் ஜனவரி மாதத்தின் எந்த வாரத்திலும் இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.