‘இந்தியாவின் சீர்திருத்தங்கள், உலகின் பார்வையை மாற்றி உள்ளன’ - பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், இந்தியா மீதான உலகத்தின் பார்வையை மாற்றி உள்ளன என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2020-12-20 01:03 GMT
புதுடெல்லி, 

தலைநகர் டெல்லியில், அசோசேம் என்று அழைக்கப்படுகிற இந்தியாவின் வர்த்தக, தொழில்துறை இணைசபை மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

6 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட விவசாய சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு பலன் அளிக்கத்தொடங்கி உள்ளன. கடந்த காலத்தில் இந்தியாவில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்று முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்புகிற நிலை இருந்தது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், அவற்றினால் ஏற்பட்ட விளைவுகள், இந்தியாவில் முதலீடு செய்தால் என்ன என்று கேட்கிற நிலைக்கு கொண்டு வந்துள்ளன.

முன்பு இந்தியாவில் முதலீடு செய்யக்கூடாது என முதலீட்டாளர்கள் கருதியதற்கு காரணம், அதிக வரிகள் ஆகும். ஆனால் இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரிகள் போட்டி போடத்தக்க அளவில் கணிசமாக குறைக்கப்பட்டு, ஏன், இந்தியாவில் முதலீடு செய்தால் என்ன என்று கேட்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

முன்பு சிவப்பு நாடா முறை (கடினமான சட்டதிட்டங்கள்), முதலீட்டாளர்களை எதற்காக இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்க வைத்தது. இப்போதோ அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளதால் ஏன், இந்தியாவில் முதலீடு செய்தால் என்ன என்று கேட்க வைத்து இருக்கிறது.

முன்பு எதையெடுத்தாலும் அரசின் தலையீடு இருந்ததால், முதலீட்டாளர்கள் எதற்காக இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்கிற நிலை இருந்தது. தற்போது, தனியார் துறையில் அரசு வைத்துள்ள நம்பிக்கையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஊக்கமும், அதே மக்களை ஏன் இந்தியாவில் முதலீடு செய்தால் என்ன என்று சொல்ல வைத்துள்ளது.

இந்தியா, தன்னிறைவு இந்தியா என்ற நிலையை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அரசின் முக்கிய கவனம், உற்பத்தி துறையின் மீதும், உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான சலுகைகள் மீதும் உள்ளது. இந்தியா தன்னிறைவு அடைவதற்கு தொழில் துறையினர் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், இந்தியா மீதான உலகளாவிய பார்வையை மாற்றி உள்ளன. இந்தியாவில் முதலீடுகள் செய்தால் என்ன என்று கேட்க வைத்துள்ளது. இந்திய பொருளாதாரம் மீது உலகம் நம்பிக்கை வைத்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அதற்கான தேவை எழுந்துள்ளது.

அமெரிக்காவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை பொறுத்தமட்டில் தனியார் துறையினரின் 70 சதவீத முதலீடுகளை கொண்டுள்ளது. இந்தியாவில் அந்த முதலீட்டை பொதுத்துறைதான் செய்கிறது. இதில் ஒரு பெரிய பகுதியை தகவல்தொழில்நுட்பம், மருந்து, போக்குவரத்து துறைகள் கொண்டுள்ளன.

விவசாயம், பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, கட்டுமானம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். புவிசார் அரசியல் முன்னேற்றங்களுக்கு ஏற்ற வகையில் நாம் விரைவாக செயல்பட வேண்டும். உலகளாவிய வினியோக சங்கிலியில் எந்தவொரு திடீர் தேவையையும் இந்தியா எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதை பார்ப்பதற்கு ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அசோசேமின் நூற்றாண்டின் தலைசிறந்த நிறுவன விருதை டாடா அறக்கட்டளைகளின் தலைவரான ரத்தன் டாடாவுக்கு பிரதமர் மோடி வழங்கினார். அத்துடன் அவருடன் சில நிமிடங்கள் கலந்துரையாடினார். அப்போது மோடி, “கடந்த 100 ஆண்டுகளில் அசோசேமும், ஒட்டுமொத்த டாடா குழுமமும் நாட்டின் பொருளாதாரத்தையும், சாமானிய இந்தியர்களையும் வலுப்படுத்த கடுமையாக உழைத்துள்ளன. ரத்தன் டாடா நாட்டுக்கு சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக கவுரவிக்கப்பட்டுள்ளார்” என கூறினார்.

மேலும் செய்திகள்