பா.ஜ.க.வுக்கு 5 ஆண்டுகள் கொடுங்கள் தங்கம் போன்ற வங்காளம் அமையும்: அமித்ஷா பேச்சு

பா.ஜ.க.வுக்கு 5 ஆண்டுகள் கொடுங்கள், தங்கம் போன்ற மேற்கு வங்காளம் உருவாகும் என மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார்.

Update: 2020-12-19 11:49 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபைக்கு வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற கூடும் என கூறப்படுகிறது.  இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு மேற்கு வங்காளம் சென்றார்.

மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரது மந்திரிசபையில் இருந்த மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, தனது மந்திரி, எம்.எல்.ஏ. பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தார். கட்சியில் இருந்தும் விலகினார்.

இந்த சூழலில், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி, மேற்கு வங்காளத்தின் பச்சிம் மேதினிப்பூர் நகரில் இன்று நடந்த பொது கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளார்.

அவருடன் தபசி மண்டல், அசோக் திண்டா, சுதீப் முகர்ஜி, சாய்கத் பஞ்சா, சில்பத்ரா தத்தா, தீபாலி பிஸ்வாஸ், சுக்ர முண்டா, சியாமபாத முகர்ஜி, பிஸ்வஜித் குந்து மற்றும் பன்சாரி மைத்தி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளனர்.

இதேபோன்று திரிணாமுல் காங்கிரசின் புர்பா புர்த்வான் தொகுதியை சேர்ந்த எம்.பி. சுனில் மண்டல் மற்றும் முன்னாள் எம்.பி. தசரத திர்க்கே ஆகியோர் பா.ஜ.க.வில் இன்று இணைந்தனர்.

மேற்கு வங்காளத்தின் பச்சிம் மேதினிபூர் நகரில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்பொழுது, காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் 3 தசாப்தங்களாக ஆட்சி செய்தது.  கம்யூனிஸ்டு கட்சிக்கு 27 ஆண்டுகளும், சகோதரி மம்தாவுக்கு 10 ஆண்டுகளும் மக்களாகிய நீங்கள் வழங்கினீர்கள்.  பா.ஜ.க.வுக்கு 5 ஆண்டுகள் கொடுங்கள்.  தங்கம் போன்ற மாநிலம் ஆக மேற்கு வங்காளம் உருமாற்றப்படும் என பேசியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்பொழுது, திரிணாமுல் காங்கிரசில் இருந்து மூத்த கட்சி உறுப்பினர்கள் விலகி வருகின்றனர்.  தங்களது கட்சியினரை தூண்டி விடும் வேலையில் ஈடுபட்டு பா.ஜ.க. பாதிப்பு ஏற்படுத்துகிறது என சகோதரி குற்றச்சாட்டு கூறுகிறார்.  ஆனால், காங்கிரசில் இருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரசை அவர் உருவாக்கும்பொழுது, அது பாதிப்பு இல்லையா? என அவரை கேள்வி கேட்க நான் விரும்புகிறேன்.

இது ஒரு தொடக்கம்.  தேர்தலின்பொழுது அவர் தனித்து விடப்படுவார்.  தேர்தல் முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளிவரும்பொழுது, பா.ஜ.க. 200 தொகுதிகளுக்கும் கூடுதலாக கைப்பற்றி அரசு அமைக்கும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்