“நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பேச அனுமதிக்கவில்லை” - சபாநாயகருக்கு ராகுல்காந்தி கடிதம்
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் வெளிநடப்பு செய்தது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,
பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்தநிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல்காந்தி நேற்று கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில், விவாத பொருளாக ராணுவ சீருடை பிரச்சினையை தேர்வு செய்திருந்தனர். தற்போது லடாக் எல்லையில் நிலவும் சூழ்நிலையை தவிர்த்துவிட்டு, சீருடை பற்றி விவாதிக்க முடிவு செய்தது எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சுட்டிக்காட்ட எனக்கு உரிமை உள்ளது. அதை நிராகரிப்பதற்கு நிலைக்குழு தலைவருக்கு உரிமை உள்ளது.
ஆனால், நிலைக்குழு தலைவர் என்னை பேசவே அனுமதிக்கவில்லை. ராணுவ விவகாரங்களை இந்த அரசு எப்படி கையாள்கிறது என்பதை இது காட்டுகிறது. ஆகவே, மக்களவையின் பாதுகாவலர் என்ற முறையில், நிலைக்குழு கூட்டத்தில் உறுப்பினர் சுதந்திரமாக பேசும் உரிமை பாதுகாக்கப்படுவதை தாங்கள் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும். நிலைக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்துக்கு ஏற்ப விவாதம் நடத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.