நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க சர்தார் வல்லபாய் படேலின் பாதை நம்மை ஊக்குவிக்கும் - பிரதமர் மோடி
நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க சர்தார் வல்லபாய் படேலின் பாதை நம்மை ஊக்குவிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 70-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் நந்தட் மாவட்டத்தில் 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பிறந்த வல்லபாய் பட்டேல், இந்தியாவின் 562 சமஸ்தானங்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றினார். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், முதல் துணை பிரதமராகவும் விளங்கினார்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு நாளான இன்று பிரதமர் மோடி, அவரை நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்த இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க அவரின் பாதை எப்போதும் நம்மை ஊக்குவிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.