விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம்
விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
மும்பை,
மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தி கிராமத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “டெல்லியில் நடந்து வரும் போராட்டம், நாடு முழுவதும் பரவ வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். அந்த சூழல் அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இதை சாதிக்க விவசாயிகள் சாலைகளில் இறங்கி போராட வேண்டும். ஆனால் யாரும் வன்முறையில் ஈடுபட்டுவிட கூடாது” என்று அவர் கூறினார்.