டெல்லியில் விவசாயிகள், அரசுக்கு இடையே நாளை பேச்சுவார்த்தை இல்லை; விவசாய சங்க பொது செயலாளர் பேட்டி
டெல்லியில் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நாளை பேச்சுவார்த்தை நடைபெறாது என விவசாய சங்க பொது செயலாளர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது. விவசாயிகள் நலனை முன்னிட்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் கடந்த நவம்பர் 26ந்தேதி டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில், அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். நீண்டகால போராட்டத்தினை கவனத்தில் கொண்டு, விவசாயிகள் 6 மாத காலத்திற்கு தேவையான உணவு பொருட்களையும் தங்களுடன் கொண்டு சென்றுள்ளனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு சுமூக தீர்வு காணப்படும் வகையில், மத்திய வேளாண் மந்திரி என்.எஸ். தோமர் தலைமையில் கடந்த 1ந்தேதி மற்றும் 3ந்தேதிகளில் அரசு சார்பிலான பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து போராட்டம் நீடித்தது. மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே நடந்த 4 கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாத நிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், 4 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தும், சுமுக முடிவு காணப்படவில்லை. மத்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப வருகிற 9ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவசாய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என கூறப்பட்டது.
இந்த சூழலில், விவசாயிகளின் போராட்டத்திற்கு டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகியது.
இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்தனர். அதன்படி அமைதியுடன் பந்த் நடந்து முடிந்தது.
இந்நிலையில் விவசாய தலைவர்கள் நாளை அரசுடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தை பற்றி மத்திய மந்திரி அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு நடத்தினர். இதுபற்றி அனைத்திந்திய விவசாய சபையின் பொது செயலாளர் ஹன்னன் மொல்லா கூறும்பொழுது, விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நாளை பேச்சுவார்த்தை நடைபெறாது. விவசாய தலைவர்களிடம் அரசின் முன்மொழிவு ஒன்று நாளை வழங்கப்படும் என எங்களிடம் மத்திய மந்திரி கூறினார்.
அரசின் முன்மொழிவை பற்றி விவசாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்துவார்கள். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை. டெல்லி மற்றும் அரியானாவின் சிங்கு எல்லை பகுதியில் பகல் 12 மணியளவில் நாளை விவசாயிகளிடையே ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என அவர் கூறினார். விவசாயிகளுடனான பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அதில் முன்னேற்றம் எட்டப்படாத நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.