கர்நாடகாவில் ‘பாரத் பந்த்’ முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

கர்நாடக மாநிலத்தில் விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2020-12-08 04:52 GMT
பெங்களூரு,

மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகிவற்றை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. 

இந்நிலையில் இன்று விவசாயிகள் அறிவித்த ‘பாரத் பந்த்’ எனப்படும் நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து தற்போது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள விதான சவுதா பகுதியில் அமைந்திருக்கும் காந்தி சிலைக்கு அருகில், காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சித்தராமையா, பி.கே.ஹரிபிரசாத், ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்