விவசாயிகள் பாரத் பந்த் அறிவிப்புக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு
விவசாயிகள் பாரத் பந்த் அறிவிப்புக்கு பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் போர்க்கொடி தூக்கி, டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
12-வது நாளாக தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்தவகையில் வரும் 8-ஆம் தேதி பாரத் பந்த்திற்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த பந்த் அறிவிப்புக்கு பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், விவசாயம் தொடர்பான மூன்று புதிய சட்டங்களை வாபஸ் பெறுமாறு நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர், டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட "பாரத் பந்த்" க்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிக்கிறது. மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்குமாறு மீண்டும் கோரிக்கைவிடுக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.