அணையில் மூழ்கி குழந்தைகள், பெண்கள் என 5 பேர் பலி; முதல் மந்திரி இழப்பீடு அறிவிப்பு
மத்திய பிரதேசத்தில் அணையில் மூழ்கி குழந்தைகள், பெண்கள் என 5 பேர் பலியான சம்பவத்தில் முதல் மந்திரி இழப்பீடு அறிவித்து உள்ளார்.
அகர் மால்வா,
மத்திய பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் பச்சேத்தி அணைக்கு குழந்தைகளுடன் சென்ற 2 பெண்கள் திடீரென நீரில் மூழ்கினர். அவர்களுடன் இருந்த 3 குழந்தைகளும் அணைநீரில் மூழ்கினர். இதில் மூச்சு திணறி அவர்கள் 5 பேரும் உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட ஆட்சியர் அவதேஷ் சர்மா, அதிகாரிகள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ பகுதிக்கு சென்றனர். இதனை தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
அவர்கள் ராமகன்யா, சுனிதா, ஜெயா, ஆல்கா மற்றும் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அணையில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் டுவிட்டர் வழியே இரங்கல் தெரிவித்து உள்ளார்.
அந்த செய்தியில், மத்திய பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் பச்சேத்தி அணையில் மூழ்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீட்டு தொகையும், உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.5 ஆயிரமும் அரசு வழங்கும் என தெரிவித்து உள்ளார்.