ஆந்திர முதல்-மந்திரியை பதவி நீக்க கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை பதவி நீக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2020-12-01 20:23 GMT
புதுடெல்லி, 

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, நீதிபதி என்.வி.ரமணாவுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக வக்கீல் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் “ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்த குற்றச்சாட்டுகளை விசாரித்து, அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். பதவியை தவறாக பயன்படுத்தியதால், முதல்-மந்திரி பதவியை வகிக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு அதிகாரம் இல்லை என அறிவிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இதுபோல, சுனில் குமார் சிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “நீதிபதிகளுக்கு எதிராக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவதற்கு தடை விதிக்கவும், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?” என கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் கோரப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

மனுதாரர் வக்கீல் ஜி.எஸ். மணி ஆஜராகி, முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பதவியை தவறாக பயன்படுத்தி, நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டை அவதூறு செய்துள்ளார் என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், அவதூறு செய்யும் வகையில் அமைந்திருந்தாலும், அது பொதுவெளியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் என்ன விசாரிக்க வேண்டியுள்ளது என கேட்டனர். மேலும் இதுபோன்ற கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மற்றொரு மனுதாரர் சுனில் குமார் சிங் சார்பில் வக்கீல் முக்தி சிங் வாதிடுகையில், இ.எம்.எஸ். நம்பூதிரிபட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்துகளுக்கு மாறாக ஆந்திர முதல்-மந்திரியின் செயல்பாடு உள்ளது என வாதிட்டார்.

வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விசாரிக்கப்பட்ட வழக்குடன், இந்த மனுவையும் இணைக்க உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்