ஒவ்வொருவரின் இதயத்தையும் பாஜக வென்று வருகிறது - தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாதவர்களுக்கு, தேர்தலில் வாக்குகள் சரிந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2020-11-11 14:35 GMT
புதுடெல்லி,

பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜே.பி.நட்டா திறந்த காரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பாஜக தொண்டர்கள் மலர் தூவியும், பட்டாசுகளை வெடித்தும், அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஆடல் பாடலுடன் வரவேற்பு நடைபெற்றது. தொண்டர்களை நோக்கி பிரதமர் மோடி வெற்றி அடையாளத்தை காட்டினார்.

அதனைதொடர்ந்து பிரதமர் மோடி பாஜக தலைமை அலுவலகத்தில்  பேசியதாவது:-

அமைதியாக தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையம் மற்றும் பாதுகாப்பு வீர‌ர்களுக்கு வாழ்த்துக்கள். பீகார் தேர்தலில் இத்தகைய வெற்றியை கொடுத்தது மக்களுக்கு நன்றி. கொரோனா காலத்தில் தேர்தலை நடத்தி, உலகத்துக்கே இந்தியா தன்னுடைய சக்தியை காட்டியுள்ளது. 

பாஜகவின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும், குடும்பத்தினருக்கும் அவர்களின் அர்ப்பணிப்பு பணிகள் மற்றும் தேர்தல்களில் பங்களிப்பு செய்ததற்காக நான் வாழ்த்துகிறேன். தேர்தலில் வெற்றிபெற உறுதுணையாக இருந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஜியை நான் வாழ்த்த விரும்புகிறேன்.

நாட்டின் வளர்ச்சிக்கு நேர்மையாக உழைப்பவர்களுக்கு நாட்டுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று இந்திய மக்கள் பலமுறை தெளிவுபடுத்துகின்றனர்.

ஒரு காலத்தில் பாரதிய ஜனதாவுக்கு இரண்டு அறைகளுடன் 2 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.  தற்போது தேசம் முழுவதும் விரிந்து ஒவ்வொருவரின் இதயத்தையும் பாஜக வென்று வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேலை செய்யுங்கள். நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாதவர்களுக்கு, தேர்தலில் வாக்குகள் சரிந்துள்ளது. வளர்ச்சிப் பாதையில் நாட்டை கொண்டு செல்லும் தீர்மானத்தை மக்கள் எடுத்துள்ளனர். 

காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்கான கட்சி. ஜனநாயகத்தில் வாரிசு அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்