இந்தியர்கள் எப்போது தடுப்பூசி வந்தாலும் போட்டுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தகவல்

மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் அதிகரித்து வருவது காணப்பட்டது. குறிப்பாக மொத்தம் 15 நாடுகளில் 10 நாடுகளில் தயக்கம் அதிகரித்து இருக்கிறது.

Update: 2020-11-07 01:23 GMT
புதுடெல்லி, 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பல நாட்டினரும் தயக்கம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியர்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வமாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. தடுப்பூசியை பற்றி மக்களின் மனநிலையை அறியும்பொருட்டு உலக பொருளாதார மன்றமும் இப்சோஸ் நிறுவனமும் இணைந்து கருத்துக்கணிப்பில் இறங்கின.

இந்த அமைப்புகள் இணைந்து கடந்த மாதம் 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை அமெரிக்கா, கனடா சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளில் ஆய்வு நடத்தின. இதில் 18,526 பேரிடம் (பெரியவர்கள்) கருத்துகள் கேட்கப்பட்டன.

இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில், மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் அதிகரித்து வருவது காணப்பட்டது. குறிப்பாக மொத்தம் 15 நாடுகளில் 10 நாடுகளில் தயக்கம் அதிகரித்து இருக்கிறது. தடுப்பூசி வந்தால் போட்டுக்கொள்ள 73 சதவீதம் பேர் மட்டுமே தயாராக இருப்பதாக தெரிவித்தனர். சீனா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரேசில் போன்ற நாட்டினரிடம் அதிகமான தயக்கம் காணப்படுகிறது.

அதேநேரம் இந்தியர்கள் எப்போது தடுப்பூசி வந்தாலும் போட்டுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தனர். குறிப்பாக 87 சதவீதத்தினர் இந்த ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

உலக அளவில் 10-ல் ஒருவர் பொதுவாகவே தடுப்பூசிக்கு எதிராக உள்ளார். இந்தியாவில் 19 சதவீதம் பேர் இந்த பிரிவினராக இருக்கின்றனர். மேலும் தடுப்பூசியால் பயன் இருக்காது என உலக அளவில் 10 சதவீதத்தினரும், இந்தியர்கள் 14 சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்