டெல்லியில் கடுமையான காற்று மாசு; மக்கள் அவதி

டெல்லியில் காற்று மாசு கடுமையாக இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Update: 2020-11-06 05:44 GMT
புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசு ஒவ்வொரு ஆண்டும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பெருகி வரும் வாகனங்கள் வெளியிடுகிற புகை மட்டுமல்ல, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் விவசாயிகள் கழிவுகளை தீ வைத்து எரிக்கிறபோது ஏற்படுகிற புகையும் டெல்லிக்கு காற்றில் கடும் மாசு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த புகையின் மூலம் காற்றில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு ஆகியவை கலக்கின்றன. காற்றில் மாசு அதிகரிப்பதால், அதன் தரம் குறைந்து கொண்டே போகிறது. இன்று  காலை 9 மணி நிலவரப்படி ‘ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற காற்று தர சுட்டெண் 448- ஆக இருந்தது. 

(காற்று தர சுட்டெண் 251-350 வரையில் இருக்கிற போது காற்றின் தரம் மிகவும் மோசம் என்று அர்த்தம்). காற்று தர சுட்டெண் 50 என்ற அளவில் இருந்தால்தான் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அமைதியான காற்றும், குறைந்த வெப்ப நிலையும் காற்றின் மாசு அதிகரிப்புக்கு துணை நிற்கின்றன. டெல்லியில் காற்றின் தரம் மோசமாகி வருவது பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, வரும் 7 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்