ரபேல் விமானங்களை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்ந்த விமானப்படைக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
பிரான்சிலிருந்து ரபேல் விமானங்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்ந்த விமானப்படைக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.59 ஆயிரம் கோடிக்கு இந்தியா வாங்குகிறது. கடந்த 2016-ம் ஆண்டு போடப்பட்ட இந்த ஒப்பந்தப்படி இந்த விமானங்களை இந்தியாவுக்கு பிரான்ஸ் நாடு வழங்கி வருகிறது.
இதில் முதற்கட்டமாக 5 விமானங்கள் கடந்த ஜூலை 29-ந்தேதி இந்தியா வந்து சேர்ந்தன. அவை அரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்தில் முறைப்படி சேர்க்கப்பட்டு உள்ளன. சீனாவுடன் மோதல் ஏற்பட்டுள்ள லடாக் பிராந்தியத்தில் அவை ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில் 2-ம் கட்டமாக பிரான்சில் இருந்து 3 ரபேல் போர் விமானங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை விமானப்படை முடுக்கி விட்டிருந்தது. இதற்காக விமானப்படை அதிகாரிகள் ஏற்கனவே பிரான்ஸ் சென்று, அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து 3 விமானங்களும் நேற்று இந்தியா வந்து சேர்ந்தன. அவை குஜராத்தின் ஜாம்நகர் விமானப்படை தளத்துக்கு நேற்று இரவு 8.14 மணியளவில் வந்தன. இந்த 3 விமானங்களும் பிரான்சில் இருந்து இடைநிற்றல் எதுவும் இன்றி நேரடியாக ஜாம்நகர் வந்து சேர்ந்ததாக விமானப்படை கூறியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்த 5 விமானங்களும், ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கி விட்டு மீண்டும் இந்தியா புறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவுடன் மோதல் நீடித்து வரும் இந்த காலகட்டத்தில், இத்தகைய விமானங்கள் இந்தியாவுக்கு மிகவும் தேவையாக கருதப்படுகின்றன. வான்படையின் மகுடமாக கருதப்படும் இந்த போர் விமானங்கள், இந்திய விமானப்படைக்கு மேலும் வலுவூட்டும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், பிரான்சிலிருந்து 3 ரபேல் போர் விமானங்களையும் பாதுகாப்பாக கொண்டு வந்ததற்கு பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மிகவும் சிக்கலான பணியை தொழில் ரீதியாகவும், பாதுகாப்பாகவும் வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக இந்திய விமானப்படைக்கு பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்ததாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.