பீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

Update: 2020-10-28 01:37 GMT
பாட்னா,

பீகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. 

 முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி மக்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்கு பதிவில் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள 6 மந்திரிகளின் அரசியல் எதிர்காலம் நிர்ணயம் செய்யப்படும்.

3 கட்ட வாக்கு பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசு 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவித்து உள்ளது.  மாவோயிஸ்டுகள் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  80 வயது கடந்த மூத்த குடிமக்கள் அல்லது மாற்று திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டு நடைமுறையும் உள்ளது.  இதன்படி, 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்