சச்சின் பைலட்டுடன் ஜோதிர்ஆதித்ய சிந்தியா சந்திப்பு
மத்தியபிரதேசத்தில் பிரசாரம் செய்ய வந்த சச்சின் பைலட்டை, ஜோதிர்ஆதித்ய சிந்தியா சந்தித்தார்.
போபால்,
மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் இளம் தலைவராக இருந்த ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கடந்த மார்ச் மாதம், தன் ஆதரவாளர்களுடன் பா.ஜனதாவில் சேர்ந்தார். அதுபோல், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட், கடந்த ஜூலை மாதம், தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.
பின்னர், சமரசம் ஏற்பட்டு காங்கிரசிலேயே நீடிக்கிறார். இந்த நிலையில், 28 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்ய சச்சின் பைலட் நேற்று மத்தியபிரதேச மாநிலம் குவாலியருக்கு வந்தார். அங்கு அவரை சந்தித்ததாக ஜோதிர்ஆதித்ய சிந்தியா ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
குவாலியரில் சச்சின் பைலட்டை சந்தித்தேன். அவரை வரவேற்றேன். தனது மண்ணுக்கு வருபவர்களை வரவேற்பது மத்தியபிரதேசத்தின் பாரம்பரியம். எனவே, சச்சின் பைலட்டும் வரவேற்கத்தக்கவர் தான்” என்று அவர் கூறினார்.