ஏழை குழந்தைகளுக்கு கோவில் வளாகத்தில் பாடம் எடுக்கும் காவலரின் சமூக அக்கறை
டெல்லியில் கோவில் வளாகத்தில் சமூக அக்கறை கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஏழை குழந்தைகளுக்கு பாடம் எடுத்து ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரசால் பொதுமக்கள் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். இதனால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. எனினும், மாணவ மாணவியரின் வருங்கால நலனை கவனத்தில் கொண்டு ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத மாணவ மாணவிகளின் நலனுக்காக பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பள்ளி கூடங்களுக்கு வருபவர்கள் தங்களது பெற்றோரின் முன்அனுமதி பெற்று வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த வருடத்தில் பள்ளி வருகை பதிவானது கட்டாயமில்லை என பல மாநில அரசுகள் கூறியுள்ளன. இந்நிலையில், ஆன்லைன் உள்ளிட்ட எந்தவித வகுப்புகளிலும் கலந்து கொள்ள வசதியில்லாத ஏழை மாணவர்களும் உள்ளனர்.
இதுபோன்றவர்களின் நலனிற்காக டெல்லி செங்கோட்டை அருகே கோவில் வளாகம் ஒன்றில், ஏழை குழந்தைகள் சிலருக்கு போலீஸ்காரர் ஒருவர் பாடங்களை சொல்லி கொடுத்து வருகிறார். இதுபற்றி போலீஸ் கான்ஸ்டபிள் தான்சிங் என்பவர் கூறும்பொழுது, கொரோனா பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பிருந்தே பள்ளி மாணவ மாணவியருக்கு பாடங்களை பயிற்றுவித்து வருகிறேன்.
இவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள வசதி இல்லாதவர்கள். அவர்களும் கல்வி பயில வேண்டும் என நான் விரும்பினேன். இதனால், கெட்ட நண்பர்களின் சேர்க்கை, குற்ற செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றில் அவர்கள் சிக்காமல் இருந்திடுவார்கள் என்று சமூக நலனை கவனத்தில் கொண்டு அவர் கூறியுள்ளார்.