பம்பையில் குளிக்க தடை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்படுகிறது. தினமும் 250 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

Update: 2020-10-15 01:13 GMT
திருவனந்தபுரம், 

இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறாது.

மறுநாள் 17 - ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். இந்த பூஜை வருகிற 21 -ந் தேதி வரை நடைபெறும். ஆன் லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களில் தினமும் 250 பேர் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க படுவார்கள். அவர்கள் தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பெறப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும். நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

பம்பையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் குளிப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. அய்யப்ப பக்தர்கள் கொண்டு வரும் நெய், அபிஷேகத்திற்கு பின் பக்தர்களுக்கு சிறப்பு கவுண்டர்கள் வழியாக வழங்கப்படும். அரவணை, அப்பம் வழக்கம் போல் விற்பனை செய்யப்படும்.

ஐப்பசி மாத பூஜைகளையொட்டி வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜைகளும் நடைபெறும். 21-ந் தேதி சிறப்பு பூஜைகளுக்கு பின் இரவு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

17-ந் தேதி காலை 9 மணிக்கு சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு குலுக்கல் முறையில் நடைபெறும். கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி, தேவஸ்தான தலைவர் வாசு, உறுப்பினர்கள் விஜயகுமார், ரவி, சிறப்பு கமிஷனர் மனோஜ், தேவஸ்தான கமிஷனர் திருமேனி மற்றும் உயர் நீதிமன்ற கண்காணிப்பாளர் முன்னிலையில் புதிய மேல் சாந்திகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் மேல்சாந்திகள் அடுத்த மாதம் (நவம்பர்) 15- ந் தேதி முதல் ஒரு ஆண்டிற்கு படி இறங்கா மேல்சாந்திகளாக சபரிமலையில் தங்கி இருந்து பூஜைகள், வழிபாடுகளை நிறை வேற்றுவார்கள்.

மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி அடுத்த மாதம் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். மண்டல பூஜை டிசம்பர் 26 - ந் தேதியும், மகர விளக்கு பூஜை 2021-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதியும் நடைபெறும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்