இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குருக்கு கொரோனா - வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்

இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.

Update: 2020-10-13 02:22 GMT
சிம்லா,

உலகையே பரபரப்புக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்று ஏழை- பணக்காரன் என்ற எந்தவித பேதமும் இன்றி அனைத்து தரப்பினரையும் வாட்டி வதைக்கிறது. இந்த கொடூர வைரசின் கரங்களில் சாதாரண மக்கள் மட்டுமின்றி அரசியலில் கோலோச்சும் பெரும் தலைவர்களும் சிக்கி வருகின்றனர்.

அந்தவகையில் மிகப்பெரும் வல்லரசாகிய அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்பும் கூட கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். இதைப்போல இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட பல நாட்டு தலைவர்களும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர்.

இந்தியாவிலும் இந்த தொற்று பல தலைவர்களை பாதித்தது. குறிப்பாக அமித்ஷா, தர்மேந்திர பிரதான், ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்ட பல மத்திய மந்திரிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று மீண்டனர். ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு பலியாகி இருந்தார்.

மேலும் சிவராஜ் சிங் சவுகான், எடியூரப்பா, மனோகர்லால் கட்டார், பெமா காண்டு என பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாயினர். இவர்களை தவிர நாடு முழுவதும் பல மாநில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என மக்கள் பிரதிநிதிகள் பலரும் கொரோனாவிடம் சிக்கியிருந்தனர்.

இந்த வரிசையில் தற்போது இமாசல பிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘கொரோனா பாதித்த ஒருவரை சில நாட்களுக்கு முன் நான் சந்தித்ததால், கடந்த ஒரு வாரமாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தேன். கடந்த 2 நாட்களாக கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் இன்று (நேற்று) கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். இதில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் டாக்டர்களின் அறிவுறுத்தலின்பேரில் தனது அலுவலக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும் அதில் அவர் கூறியிருந்தார். முதல்-மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அரசு மற்றும் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

இமாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குரை தவிர மேலும் சில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ஒருசிலர் சிகிச்சை பெற்று குணமடைந்து பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்