கொரோனா நோய் பரவலுக்கு இடையே வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு
கொரோனா நோய் பரவலுக்கு இடையே வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதி அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அனைத்து தொழில்களும் முடங்கின. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை ஏற்பட்டது. ஆனால் ஊரடங்கின் இடையே வேளாண் தொழிலுக்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக வேளாண் உற்பத்தி பெருகியது. இது வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதியில் முன்னேற்றத்தை கண்டிருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் அத்தியாவசிய வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதி 43.4 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.37,397.3 கோடியாக இருந்த ஏற்றுமதி வருவாய், இந்த ஆண்டு ரூ.53,626.6 கோடி யாக அதிகரித்து இருக்கிறது.
ஏற்றுமதி அளவீட்டில் பாசுமதி அரிசி 13 சதவீதமாகவும், பாசுமதி அல்லாத பிற அரிசி வகைகள் 105 சதவீதமாகவும், நிலக்கடலை 35 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை 104 சதவீதமாகவும் உள்ளது. கோதுமை ஏற்றுமதி 206 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாதாந்திர அடிப்படையில் அத்தியாவசிய விளைபொருட்களின் ஏற்றுமதி கடந்த செப்டம்பர் மாதம் 81.7 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
வேளாண் விளை பொருட்களின் ஏற்றுமதி இந்த அளவுக்கு அதிகரிப்பதற்கு, மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டில் கொண்டுவந்த புதிய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி கொள்கையே காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் வாழை, திராட்சை, மா, மாதுளை, வெங்காயம் போன்ற பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க 8 ஊக்குவிப்பு மையங்களையும் அரசு அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.