பிரதமர் மோடி மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இறுதி மரியாதை
பிரதமர் மோடி மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு அவரது இல்லத்தில் இன்று இறுதி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரியாக பதவி வகித்தவர் ராம்விலாஸ் பாஸ்வான் (வயது 74).
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள போர்ட்டிஸ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவரது உடல்நிலையில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 3ந்தேதி இரவு அவருக்கு அவசரமாக இதய அறுவை சிகிச்சை நடந்தது.
இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். இதன்பின் அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று காலை அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று, மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பாஸ்வான் இல்லத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி அவரது உடலுக்கு மலர்தூவி இறுதி மரியாதை செலுத்தினார். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும், ராம்விலாஸ் பாஸ்வான் இல்லத்தில் அவரது உடலுக்கு மலர்தூவி இறுதி மரியாதை செலுத்தினார்.