கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - டி.கே.சிவக்குமார்
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார். இது தொடர்பாஜ கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ராஜராஜேஸ்வரிநகர் மற்றும் சிரா தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நாங்கள் அறிவித்துள்ளோம். எங்கள் கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த வேட்பாளர்களை முடிவு செய்துள்ளோம். வாக்காளர்கள் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்து வாக்களிப்பார்கள். எனது வீட்டில் நடைபெற்ற சி.பி.ஐ. சோதனையை முன்வைத்து தேர்தலை சந்திக்க மாட்டோம்.
ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குசுமா ரவி, நன்கு படித்தவர். அதே போல் சிரா தொகுதியில் போட்டியிடும் ஜெயச்சந்திரா மிக பிரபலமானவர். பா.ஜனதா கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. 2 தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.