தேர்தலில் ‘சீட்’ வழங்க லஞ்சம் கேட்டதாக தேஜஸ்வி யாதவ் மீது குற்றம் சாட்டிய தலித் தலைவர் சுட்டுக்கொலை

பீகாரில் தேர்தலில் ‘சீட்’ வழங்க லஞ்சம் கேட்டதாக தேஜஸ்வி யாதவ் மீது குற்றம் சாட்டிய தலித் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்.

Update: 2020-10-05 00:27 GMT
பாட்னா,

பீகார் சட்டசபைக்கு வருகிற 28-ந் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இந்த தேர்தலில் களம் காணும் முக்கிய கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீட்டுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்தநிலையில் ராஷ்ட்ரிய ஜனதாள கட்சியின் உறுப்பினரும் தலித் இனத்தைச் சேர்ந்தவருமான சக்தி மாலிக் என்பவர் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், மாநிலத்தின் தனி தொகுதிகளில் ஒன்றான ராணிகஞ்ச் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதாள தளம் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரியதாகவும் அதற்கு கட்சியின் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் ரூ.50 லட்சம் கேட்டதாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி தொகுதிக்கு தொடர்ந்து நல்லது செய்தால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் சக்தி மாலிக் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சக்தி மாலிக் நேற்று தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பிச் சென்றது. இதில் சக்தி மாலிக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். சக்தி மாலிக்கின் மனைவி தனது கணவரின் கொலையில் அரசியல் பின்னணி இருப்பதாகவும், அவர் ராணிகஞ்ச் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்திருந்த நிலையில் அவரை கொலை செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்