இளைஞர்களின் உறுதியான மனநிலையை பிரதிபலிக்கிறது: நீட் தேர்வில் 85-90 சதவீத மாணவர்கள் பங்கேற்பு - ரமேஷ் பொக்ரியால்

நீட் தேர்வில் 85-90 சதவீத மாணவர்கள் பங்கேற்றதாகவும், இது இளைஞர்களின் உறுதியான மனநிலையை பிரதிபலிப்பதாகவும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-13 16:26 GMT
புதுடெல்லி, 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. நீட் எனப்படும் இந்த நுழைவுத் தேர்வை மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நடத்துகிறது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் எழுதினார்கள். தமிழ்நாட்டில் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 900-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதினர்.

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் உயிரியல் பாடப்பிரிவில் கேள்விகள் எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில் நீட் தேர்வில் 85-90 சதவீத மாணவர்கள் பங்கேற்றதாக மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 85-90 சதவீத மாணவர்கள் பங்கேற்றதாக தேசிய தேர்வு முகமை(என்.டி.ஏ) தெரிவித்துள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்காக சரியான ஏற்பாடுகள் செய்து ஒத்துழைப்பு தந்த அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நன்றி. நீட் தேர்வில் இவ்வளவு சதவீதம் மாணவர்கள் பங்கேற்று இருப்பது இளைஞர்களின் உறுதியையும், மன நிலையையும் பிரதிபலிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்