அருணாசலபிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்ட 5 இளைஞர்கள் சீனாவில் இருப்பதாக ராணுவம் ஒப்புதல்
அருணாசலபிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்ட 5 இளைஞர்களும் சீனாவில் இருப்பதாக சீன ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
புதுடெல்லி,
அருணாசலபிரதேச மாநிலம் மேல் சுபன்சிறி மாவட்டம் நச்சோ பகுதியை சேர்ந்த 7 இளைஞர்கள், கடந்த வெள்ளிக்கிழமை காட்டுக்கு வேட்டையாட சென்றனர். இந்திய-சீன எல்லை அருகே சென்றபோது, அவர்களில் 5 பேரை சீன ராணுவம் கடத்தி சென்றது.
மற்ற 2 பேரும் தப்பிச்சென்று, கிராமத்துக்கு வந்து இந்த தகவலை தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சீன ராணுவத்திடம் இந்திய ராணுவம் ‘ஹாட்லைன்’ மூலம் முறையிட்டது. அதற்கு இன்னும் பதில் வரவில்லை என்று அருணாசலபிரதேசத்தை சேர்ந்த மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று முன்தினம் தெரிவித்தார். 5 பேரின் இருப்பிடம் தெரியவில்லை என்று அருணாசலபிரதேச போலீசாரும் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, நேற்று புதிய தகவலை வெளியிட்டார்.
அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய ராணுவம் அனுப்பிய ‘ஹாட்லைன்’ செய்திக்கு சீன ராணுவம் பதில் அளித்துள்ளது. காணாமல் போன 5 இளைஞர்களும் தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக உறுதி செய்துள்ளது.
5 பேரையும் நமது பகுதியில் ஒப்படைப்பது தொடர்பான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.