கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்கள் அலட்சியம்: மத்திய அரசு குற்றச்சாட்டு
கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்கள் அலட்சியம் காட்டுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இல்லாததால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமே தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் இதில் மக்கள் அலட்சியமாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினரும், கொரோனாவுக்கு எதிரான தேசிய சிறப்பு குழு தலைவருமான வி.கே.பால் கூறுகையில், ‘கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்கள் அலட்சியமாக இருப்பதாக மாநிலங்களிடம் இருந்து தொடர்ந்து எங்களுக்கு புகார்கள் வருகின்றன. சமூக விலகல், முககவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், அதிக கூட்டங்களை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம்தான் தொற்று பரவலை தடுக்க முடியும்’ என்று கூறினார்.
கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பரிசோதனை மேற்கொள்ள அஞ்சக்கூடாது என கூறிய வி.கே.பால், தைரியமாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே இந்தியாவில் 10 லட்சம் பேரில் 3,102 என்ற அளவில்தான் கொரோனா தொற்று இருப்பதாகவும், இது உலக அளவில் மிகவும் குறைந்த விகிதம் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். இதைப்போல சாவு எண்ணிக்கையும் 10 லட்சம் பேரில் 53 என்ற அளவிலேயே இருப்பதாகவும், இதுவும் உலகிலேயே குறைவான எண்ணிக்கை என்றும் அவர் கூறினார்.