கேரள தங்க கடத்தல், பெங்களூரு மாபியா கும்பல் இடையே தொடர்பு; கேரள காங்கிரஸ் தலைவர் அதிரடி குற்றச்சாட்டு

கேரள தங்க கடத்தலுக்கும், பெங்களூருவில் பிடிபட்ட போதை பொருள் மாபியா கும்பலுக்கும் இடையே தெளிவான தொடர்பு உள்ளது என கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

Update: 2020-09-04 14:36 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் இருந்து வந்த பெட்டியில் அன்றைய தினத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.  அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.  இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இதனால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.  கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரிடமும் விசாரணை நடந்து வருகிறது.  20க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.  இதுவரை ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டிருக்க கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த வழக்கில் முதல் மந்திரி அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகளான பா.ஜ.கவும், காங்கிரஸ் கட்சியும் கடுமையாக குற்றம் சாட்டி வருவதுடன், முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி தொடர்ந்து போராட்டமும் நடத்தின.

அதன் ஒரு பகுதியாக பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியுமான முரளிதரன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதுகுறித்து அவர் கூறும்பொழுது, தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு பயங்கரவாத தொடர்புகள் இருப்பதாக சுங்க இலாகா அறிக்கைகள் காட்டுகின்றன என அவர் பேசினார்.

இதேபோன்று, கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் தொடர்ந்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை விவகாரத்தில் சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது என 3 பேரும் தெரிவித்துள்ளனர் என கூறப்படுகிறது.

இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இந்த விவகாரத்தில் கன்னட நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடமும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், கேரள தங்க கடத்தலுக்கும், பெங்களூருவில் பிடிபட்ட போதை பொருள் மாபியா கும்பலுக்கும் இடையே தெளிவான தொடர்பு உள்ளது என கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் முறையான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.  இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்