லடாக் எல்லையில் சீனா அத்துமீற முயற்சி: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் 3-வது நாளாக பேச்சுவார்த்தை

லடாக் எல்லையில் சீனா அத்துமீற முயன்றதை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தை தணிப்பதற்காக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நேற்று 3-வது நாளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Update: 2020-09-02 20:15 GMT
புதுடெல்லி,

லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி அத்துமீற முயன்ற சீன படைகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஏற்பட்ட மோதல் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருக்கிறது. இரு நாடுகளின் ராணுவ மற்றும் தூதரக மட்டத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில், கிழக்கு லடாக்கில் பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த மாதம் 29-ந்தேதி சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சீன படைகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதால் அதை தணிக்கும் வகையில், அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய எல்லைக்குள் அமைந்துள்ள சுசூல் என்ற இடத்தில் இந்திய-சீன பிராந்திய ராணுவ தளபதிகள் கடந்த திங்கட்கிழமை 6 மணி நேரம் சந்தித்து பேசினார்கள். அதன்பிறகு செவ்வாய்க்கிழமையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த 2 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் ஆக்கபூர்வமான உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

இதனால் நேற்று 3-வது நாளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரை பகுதியில் ஏற்கனவே உள்ள நிலைப்பாட்டை தன்னிச்சையாக மாற்றி அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக சீனா தொடர்ந்து பிடிவாத போக்கையே கடைபிடிக்கிறது. நேற்றைய பேச்சுவார்த்தையிலும் முடிவு எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

லடாக் எல்லையில் இருந்து 310 கி.மீ. தொலைவில் உள்ள ஹோட்டன் விமானப்படை தளத்தில் சீனா தனது ஜே-20 ரக போர் விமானங்களை நிறுத்தி உள்ளது.

இதனால் இந்திய விமானப்படையும் கிழக்கு லடாக்கில் உள்ள விமானதளங்களில் சுகோய்-30, ஜாகுவார், மிராஜ்-2000 ரக போர் விமானங்களை நிறுத்தி இருப்பதோடு, எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்