கொரோனா தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டிற்கு வரும் - எய்ம்ஸ் டாக்டர் விளக்கம்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து டிசம்பர் அல்லது ஜனவரியில் தயாராக வாய்ப்புகள் உள்ளன என எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-20 18:30 GMT
புதுடெல்லி,

உலக முழுவதும் கோர முகத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவத்தொடங்கி 7 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதே நேரத்தில் பிற நோய்களுக்கு தரப்படுகிற சில மருந்துகளை சோதனை ரீதியில் கொரோனா நோயாளிகளுக்கு உலகமெங்கும் தருகின்றனர்.

இந்தநிலையில் இந்தியாவில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

கோவாக்சின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

கிளினிக்கல் ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகள் அனைத்தையும் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கிறது எனும் பரிசோதனையும் முடித்துள்ள நிலையில், இரு கட்டங்களாக மனிதர்களுக்கு மருந்தைச் செலுத்தி பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆர் ஆகியவை அனுமதி வழங்கின.

இதேபோன்று காடில்லா ஹெல்த்கேர் நிறுவனமும் ஒரு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த இரண்டு தடுப்பு மருந்துகளுமே முறையான ஆய்வுக்குட்படுத்தி விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்தவதற்கு உரிய அனுமதி பெற்றுள்ளன. மருத்துவ சோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி உரிய அனுமதி வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்து )கோவாக்சின்) தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சமூக மருத்துவ துறையின் தலைவர் சஞ்சய் ராய் கூறியதாவது:

கொரோனாவுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது இவை விலங்குகளுக்கு சோதனை முடிக்கப்பட்டு மனிதர்களுக்கு சோதிக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த சோதனையும் முடிந்தால் மட்டுமே தடுப்பு மருந்து தயாராகும். முழுமையான சோதனை முடிய 6 மாத காலங்கள் எடுக்கும். தடுப்பு மருந்து டிசம்பர் அல்லது ஜனவரியில் தயாராக வாய்ப்புகள் உள்ளன.

உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்தியா அதன் உற்பத்தியில் ஈடுபடும், ஏனெனில் உலகின் 60 சதவீத அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்றார்.

மேலும் செய்திகள்