பிற மாநிலங்களை பின்னுக்கு தள்ளிய ஆந்திரா; ஒரு வாரத்தில் 20 ஆயிரம் பாதிப்புகள்
ஆந்திர பிரதேசத்தில் ஒரு வாரத்தில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்,
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. மராட்டியத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் உள்ளன. தொடர்ந்து தமிழகம், டெல்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஒரு நாளில் அதிக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்ட மாநிலங்களின் வரிசையில், டெல்லி, தமிழகம், தெலுங்கானா, கர்நாடகம் ஆகியவை வந்தன. இந்த நிலையில் இந்த வரிசையில் ஆந்திர பிரதேசமும் இணைந்துள்ளது.
ஆந்திராவில் 642 பேர் பலியாகி உள்ளனர். 22,890 பேர் குணமடைந்துள்ளனர். 26,118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 5,041 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது. மராட்டியம் மற்றும் தமிழகம் தவிர்த்து ஒரு நாளில் இதுபோன்ற 5 ஆயிரம் எண்ணிக்கையை வேறு மாநிலங்கள் கடந்திருக்கவில்லை.
ஆந்திராவின் 50 ஆயிரம் பாதிப்புகளில் 20 ஆயிரம் பாதிப்புகள் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்டவை. இவை 40 சதவீதம் ஆகும். மராட்டியம், தமிழகம் மற்றும் கர்நாடகா தவிர்த்து பிற மாநிலங்களை விட இது மிக அதிக எண்ணிக்கையாகும்.
இதனால், நாட்டிலேயே அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலங்களின் வரிசையில் குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை விட 2 இடங்கள் முன்னேறி 5வது இடத்திற்கு வந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் 7.9 சதவீதம் அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வளர்ச்சி கண்டு வருகிறது.