சபரிமலையில் விமான நிலையத்துக்காக சர்ச்சைக்குரிய நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை சிறப்பு மசோதா தயாராகிறது

சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்காக சர்ச்சைக்குரிய நிலத்தை கைப்படுத்துவதற்கு சிறப்பு மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-07-19 22:15 GMT
கோட்டயம்,

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக எருமேலிக்கு அருகே கோட்டயம்-பத்தனம்திட்டா மாவட்ட எல்லையில் உள்ள செறுவள்ளி எஸ்டேட்டில் 2,263.18 ஏக்கரை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இந்த எஸ்டேட் தொடர்பாக தற்போது வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இந்த எஸ்டேட்டை கையகப்படுத்த சமீபத்தில் ஐகோர்ட்டு தடை விதித்தது.

எனினும் சர்ச்சைக்குரிய இந்த எஸ்டேட்டை கையகப்படுத்த மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக சிறப்பு மசோதா ஒன்றை பினராயி விஜயன் தலைமையிலான அரசு உருவாக்கி உள்ளது.

இந்த மசோதாவின்படி, உரிமை தொடர்பான சர்ச்சை உள்ள நிலங்களையும் கையகப்படுத்த முடியும். இதன்படி, 15 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை ஒரு தோட்டமாக வைத்திருக்க முடியும். நிலம் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், 15 ஏக்கர் எல்லைக்கு மேல் உள்ள நிலம் உபரி நிலமாக (மிச்ச பூமி) கருதப்படும்.

ஒரு குறிப்பிட்ட அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டாலும், உரிமை தொடர்பான ஒப்பந்தம் முழு நிலத்திற்கும் பொருந்தும். மேலும் நிலத்துக்கும், அதன் கட்டுமானங்களுக்கும் இழப்பீடு வழங்க இந்த சட்டம் வழிவகை செய்யும். இவ்வாறு கையகப்படுத்தப்படும் நிலம் குறிப்பிட்ட நபருக்கு உரிமை என இறுதி செய்யப்பட்டால், ஒட்டுமொத்த நிலமும் அவருக்கே உரியதாக கொள்ளப்படும்.

இந்த மசோதா செறுவள்ளி எஸ்டேட்டுக்காக கொண்டு வரப்பட்டாலும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும்.

இந்த மசோதா வருகிற 27-ந்தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியபின், அவசர சட்டமாக வெளியிடப்படும் என தெரிகிறது. இந்த மசோதாவில் அரசியல் சாசனத்துக்கு எதிரான வழிமுறைகள் உள்ளதா? என்பது குறித்து பரிசீலிக்க முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

எனினும் இந்த மசோதா குறித்து எந்த விவரமும் தெரியாது என வருவாய்த்துறை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்