இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்தது - மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, மொத்த நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்காக குறைந்தது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-07-16 22:00 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 32 ஆயிரத்து 695 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 876 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் குணம் அடைந்தோர் எண்ணிக்கையும் பெருகி இருக்கிறது. 63.25 சதவீதம்பேர் சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதம், கடந்த மாத மத்தியில் 50 சதவீதமாக அதிகரித்தது. அது படிப்படியாக ஏறுமுகத்தில் சென்றது. அதன்விளைவாகத்தான் இப்போது 63.25 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர்.

மேலும் தற்போது கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 ஆக குறைந்து உள்ளது. கடந்த மாத மத்தியில் 45 சதவீதம் பேர் சிகிச்சையில் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 34.18 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 20 ஆயிரத்து 783 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட குணம் அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 81 ஆயிரத்து 668 அதிகம் ஆகும்.

கொரோனாவின் பாதிப்புக்குள்ளானவர்களில் தற்போது மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கட்டுக்குள்ளும், நிர்வகிக்கும் விதத்திலும் வந்ததற்கு, வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தியதும், சுற்றளவு கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டதும், நோயாளிகளை சரியான நேரத்தில் கண்டறிந்ததும், அவர்களின் தொடர்பு தடத்தை அறிந்ததும், சோதனைகளை தீவிரப்படுத்தியதும், நன்கு திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட தரமான மருத்துவ மேலாண்மை பராமரிப்பு நெறிமுறைகளை பின்பற்றியதும்தான் காரணம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இதனால்தான் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் மீள்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது எனவும் அது தெரிவித்தது.

கொரோனா நோயாளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், கொரோனாவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட 1,381 ஆஸ்பத்திரிகளும், 3,100 சுகாதார மையங்களும், 10 ஆயிரத்து 367 பராமரிப்பு மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 46 ஆயிரத்து 666 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் போடப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதிப்பேர் (48.15 சதவீதம்), மராட்டியம் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான்.

மொத்த நோயாளிகளில் 84.62 சதவீதம் பேர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான். இந்த மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், பயனுள்ள மருத்துவ மேலாண்மையை செயல்படுத்தவும் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

பரிசோதனைத்திறனை அதிகரிக்கவும், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வயதான நோயாளிகளின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும், நாள்பட்ட நோய்களுடன் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை சிறப்பாக கவனிக்கவும் மத்திய மாநில அரசுகள் கூட்டாக முயற்சிகள் எடுத்து வருகின்றன. அதனால்தான் குணம் அடைவோர் விகிதாசாரம் தொடர்ச்சியாக முன்னேற்றம் கண்டு வருகிறது என்று மத்திய சுகாதார அமைச்சம் தெரிவிக்கிறது.

இதற்கு மத்தியில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 606 பேர் பலியாகி இருப்பது கவலை அளிப்பதாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்