ராஜஸ்தான் முதல் மந்திரிக்கு பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜே உதவினார்; அதிர்ச்சி தகவல் வெளியீடு

காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் முதல் மந்திரி கெலாட்டுக்கு பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான வசுந்தரா ராஜே உதவினார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-07-16 16:01 GMT
புதுடெல்லி,

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், அக்கட்சியின் முன்னாள் துணை முதல்-மந்திரியான சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த அதிகார மோதல் முற்றி கடந்த 14ந்தேதி பைலட்டின் துணை முதல் மந்திரி பறிக்கப்பட்டது.  இதேபோன்று பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியும் பைலட்டிடம் இருந்து பறிபோனது.

இந்த அரசியல் குழப்பத்தில் சச்சின் பைலட் அடுத்து என்ன முடிவு மேற்கொள்வார் என கேள்வி அலைகள் எழுந்தன.  எனினும், பா.ஜ.க.வின் சேரமாட்டேன் என்றும், நான் இன்னும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவே இருக்கிறேன் என்றும் பைலட் கூறி வருகிறார்.

இந்நிலையில், ராஜஸ்தானில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான ராஷ்டீரிய லோக்தந்த்ரிக் கட்சியை சேர்ந்த நகார் தொகுதி எம்.பி.யான அனுமன் பெனிவால் அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்றை டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

அதில், ராஜஸ்தானில் இரு பிரிவுகளாக காங்கிரஸ் கட்சியில் நடந்த குழப்பத்தில், பா.ஜ.க.வின் எதிரணியை சேர்ந்த அசோக் கெலாட்டுக்கு, முன்னாள் முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வசுந்தரா ராஜே உதவியுள்ளார் என தெரிவித்திருக்கிறார்.

வசுந்தரா, தனக்கு நெருங்கிய தொடர்பிலுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அழைத்து அவர்களை, அசோக் கெலாட்டுக்கு உதவும்படி கூறியுள்ளார்.  சிகார் மற்றும் நகார் தொகுதியிலுள்ள ஜாட் சமூக எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரிடமும், சச்சின் பைலட்டிடம் இருந்து விலகி இருக்கும்படி கேட்டு கொண்டார்.  இதற்கான சான்று என்னிடம் உள்ளது என தெரிவித்து உள்ளார்.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசுக்கு எதிராக உள்ள பா.ஜ.க.வின் முக்கிய நபரான வசுந்தரா, காங்கிரஸ் முதல் மந்திரிக்கு ஆதரவாக செயல்பட்ட தகவல் வெளிவந்துள்ளது பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்