கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணமடைந்த முதியவருக்கு நாளை 101வது பிறந்த நாள்
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணமடைந்த மராட்டிய மாநில முதியவருக்கு நாளை 101 வயது பிறக்கிறது.
புனே,
மராட்டியத்தில் நாட்டிலேயே அதிக அளவு கொரோனா பாதிப்புகள் உள்ளன. இவற்றில் மும்பை, புனே மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்கள் முன்னிலையில் உள்ளன. இந்த நிலையில், மும்பையில் உள்ள இந்து இருதய சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே மருத்துவமனையில் கொரோனா பாதித்த அர்ஜுன் கோவிந்த் நாரிங்ரேக்கர் என்ற 100 வயது முதியவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து அளித்த சிகிச்சையின் பலனாக உடல்நலம் தேறியது. அவரது பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இல்லை என இன்று தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவ ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் அவரை வழியனுப்ப முன்வந்தனர். இந்த சூழலில் அவருக்கு நாளை 101வது பிறந்த நாள் பிறக்கிறது என தெரிய வந்தது.
இதனால், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அவருக்கு இன்று இனிப்பு வழங்கி, பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.