4 மருத்துவமனைகளில் அனுமதி மறுப்பு; வாலிபர் பலியான அவலம்: பிரேத பரிசோதனை நடத்த உத்தரவு

மேற்கு வங்காளத்தில் 4 மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என கூறி அலைக்கழிக்கப்பட்டு பலியான வாலிபரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2020-07-14 13:05 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் இச்சாபூர் பகுதியில் 18 வயது வாலிபர் ஒருவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.  அவரது பெற்றோர் நகரின் பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.  ஆனால், 4 மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என கூறி அலைக்கழிக்கப்பட்டு உள்ளனர்.

இதில், ஒரு மருத்துவமனையில், 5 நிமிடங்களில் கையால் எழுதிய சீட்டு ஒன்றை கொடுத்து, அதில் வாலிபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என தெரிவித்து உள்ளனர்.  தொடர்ந்து, இதற்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இல்லை என கூறி அவர்களை வெளியேற்றி விட்டனர்.

இறுதியில் தற்கொலை செய்து கொள்வேன் என வாலிபரின் தாயார் விடுத்த மிரட்டலை தொடர்ந்து கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் அனுமதித்து உள்ளனர்.  எனினும், 12 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் வாலிபர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தியே பெற்றோருக்கு கிடைத்துள்ளது.

இதுபற்றி கொல்கத்தா ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில், வாலிபரின் பெற்றோர் மேற்கூறிய விவரங்களை தெரிவித்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து நீதிமன்றம், வாலிபரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட வழிமுறைகளின்படி, பிரேத பரிசோதனை மற்றும் இறுதி சடங்குகளை வீடியோ பதிவு செய்யும்படியும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.  இதுபற்றி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மேற்கு வங்காள அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

மேலும் செய்திகள்