ராஜஸ்தான் அரசில் உச்சக்கட்ட மோதல்: முதல்-மந்திரி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்க வைப்பு

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டிடம் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடக்கிறது.

Update: 2020-07-13 23:45 GMT
ஜெய்ப்பூர், 

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டுக்கு இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் இருந்து வருகிறது. அங்கு ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரிக்கு மாநில போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது. போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் அசோக் கெலாட், சச்சின் பைலட்டை அவமானப்படுத்துவதற்காகவே இந்த நோட்டீசை அனுப்ப வைத்ததாக சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர். மேலும் கெலாட்டின் தலைமையின் கீழ் இனிமேல் இயங்க மாட்டோம் எனவும் அவர்கள் கூறினர்.

இதன் தொடர்ச்சியாக தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் நேற்று முன்தினம் சச்சின் பைலட் அறிவித்தார். மேலும் நேற்று நடைபெற இருந்த மாநில சட்டசபை காங்கிரஸ் கூட்டத்திலும் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார்.

ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்-மந்திரிக்கே ஆதரவாக இருப்பதாக கெலாட் தரப்பு தெரிவித்தது. எனினும் பைலட்டின் அறிவிப்பால் முதல்-மந்திரிக்கும், துணை முதல்-மந்திரிக்கும் இடையிலான மோதல் வெளிச்சத்துக்கு வந்தது.

எனவே எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நெருக்கடியை தவிர்க்க மூத்த தலைவர்கள் ரந்தீப் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், மாநில காங்கிரஸ் பார்வையாளர் அவினாஷ் பாண்டே உள்ளிட்டோரை கட்சித்தலைமை ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் ஜெய்ப்பூரில் முகாமிட்டு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

சட்டசபைக்குழு கூட்டம்

இந்த பரபரப்பான சூழலில் கட்சியின் சட்டசபைக்குழு கூட்டம் நேற்று முதல்-மந்திரி அசோக் கெலாட் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனினும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பின்னர், ‘மாநில அரசை பலவீனமடையச்செய்யும் செயல்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சட்டமன்றக்குழு உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.) மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு பா.ஜனதாவே காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

விடுதிக்கு அழைத்து சென்றனர்

பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பஸ்கள் மூலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச்சென்று தங்க வைக்கப்பட்டனர். ஆட்சிக்கவிழ்ப்புக்காக குதிரை பேரம் நடப்பதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டசபைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்? என்ற எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் 106 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக கட்சித்தலைவர்கள் தெரிவித்தனர்.

இது உண்மை என்றால் அசோக் கெலாட் அரசுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஏனெனில் 200 உறுப்பினர் சட்டசபையில் ஆட்சியமைக்க 101 பேரின் ஆதரவு இருந்தால் போதுமானது.

எனினும் சச்சின் பைலட்டுக்கு நெருக்கமான குறைந்தது 7 எம்.எல்.ஏ.க்களை முதல்-மந்திரி வீட்டில் பார்க்க முடியவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநில சட்டசபையில் 107 உறுப்பினர்கள் காங்கிரசுக்கு இருக்கும் நிலையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதிய பழங்குடி கட்சிகளின் தலா 2 உறுப்பினர்கள், ராஷ்ட்ரீய லோக்தளத்தின் ஒரு உறுப்பினர் ஆகியோரும் அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இதைப்போல 13 சுயேச்சைகளும் அரசை ஆதரித்து வருவதாக காங்கிரஸ் ஏற்கனவே கூறியிருந்தது.

வருமான வரித்துறை சோதனை

இதற்கிடையே கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, ஜெய்ப்பூரில் காங்கிரசின் உள்ளூர் தலைவர்களின் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனையிட்டனர். இது தொடர்பாக பா.ஜனதாவை காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ரந்தீப் சுர்ஜேவாலா, முதல்-மந்திரி கெலாட்டுக்கு 109 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், மாநில அரசு தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

குடும்பத்துக்குள்ளேயே தீர்வு

சச்சின் பைலட்டிடம் கடந்த 72 மணி நேரத்தில் பலமுறை கட்சித்தலைமை பேசியுள்ளது. ஒரு குடும்பத்துக்குள் கருத்து வேறுபாடு எழுவது இயற்கைதான். அதை குடும்பத்துக்குள்ளேயே பேசி தீர்க்க முடியும். அதற்காக குடும்பத்தை கலைக்கக்கூடாது.

பைலட்டுக்கும், பிற எம்.எல்.ஏ.க்களுக்கும் இருக்கும் கவலைகளை கட்சிக்குள்ளேயே விவாதித்து தீர்வு காணலாம். அந்தவகையில் சச்சின் பைலட்டுக்கும், பிற எம்.எல்.ஏ.க்களுக்கும் காங்கிரசில் கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றன. அவர்களது குறைகள் பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்படும். இதுவே கட்சியின் ஒழுங்கு முறை ஆகும்.

இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்-மந்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த கட்சி மேலிடம் தொடர்ந்து முயன்று வருகிறது. குறிப்பாக அகமது படேல், ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் தொடர்ந்து அவருடன் பேசி வருகின்றனர்.

மேலும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் தொடர்ந்து பைலட்டுடன் தொடர்பில் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதைப்போல காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பைலட்டை சமாதானப்படுத்த முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் டெல்லியில் இருக்கும் சச்சின் பைலட் பெரும்பாலான நேரம் காங்கிரஸ் தலைவர்களின் அழைப்புகள் மற்றும் தகவல்களை ஏற்கவில்லை என அவினாஷ் பாண்டே கூறினார்.

இதற்கிடையே சட்டசபையில் 72 உறுப்பினர்களை கொண்டுள்ள பா.ஜனதா, காங்கிரசில் நடைபெறும் மோதலை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறியுள்ளது. தற்போதைய சூழலில் பா.ஜனதாவுக்கு எத்தகைய சாதகமும் இல்லை என மாநில மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையே ஏற்பட்டுள்ள மோதல் மாநில அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் வெளியேறலால் ஆட்சியை இழந்த காங்கிரஸ், பைலட்டின் மூலம் ராஜஸ்தானிலும் ஆட்சியை இழக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. எனவே ஆட்சியை தக்க வைக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் செய்திகள்