ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ? பா.ஜனதா தலைவருடன் சச்சின் பைலட் இன்று சந்திப்பு...?
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ? பா.ஜனதா தலைவரை இன்று துணை முதல்வர் சச்சின் பைலட் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி
ராஜஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதே முதல்-மந்திரி பதவியை பெறுவதற்கு முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே போட்டி நிலவியது. பின்னர் கட்சி மேலிடம் தலையிட்டு அசோக் கெலாட்டுக்கு முதல்-மந்திரி பதவியையும், சச்சின் பைலட்டுக்கு துணை முதல்-மந்திரி பதவியையும் வழங்கியது. அப்போது இந்த மோதல் முடிவுக்கு வந்தாலும், இருவரும் தாமரை இலைமேல் தண்ணீர் போல ஒட்டாமலேயே இருந்து வந்தனர்.
தற்போது அங்கு ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி உள்ளிட்டோருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இந்த விவகாரம் சச்சின் பைலட்டுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் பகிரங்கமாக மோதலை தொடங்கி உள்ளார்.
டெல்லி சென்றிருந்த அவர் நேற்று ராஜஸ்தான் திரும்பினார். உடனேயே தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக வாட்ஸ்அப் குழுவில் அறிவித்தார். மேலும் அசோக் கெலாட் அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், இன்று நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் எனவும் அறிவித்தார். இதன் மூலம், ராஜஸ்தான் அரசில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையேயான மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இவ்வாறு அசோக் கெலாட்-சச்சின் பைலட் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் மாநில அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
மாநில அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக முதல்-மந்திரி அசோக் கெலாட் நேற்று முன்தினம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடப்பதாக கூறிய அவர், இந்த சதியின் பின்னணியில் பா.ஜனதா தேசிய தலைமை இருப்பதாகவும் புகார் கூறினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்து உள்ளது. மாநிலத்தில் குதிரை பேரம் நடப்பதை நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ள பா.ஜனதாவினர், காங்கிரசின் உள்கட்சி பூசலை மறைக்கவே இந்த குற்றச்சாட்டை கெலாட் கூறுவதாக தெரிவித்துள்ளனர்.
200 பேர் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் காங்கிரஸ் 107 இடங்களைக் கொண்டுள்ளது மற்றும் 12 சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவைக் கொண்டுள்ளது. கூடுதலாக, ராஷ்டிரிய லோக் தளம், சிபிஎம் மற்றும் பாரதிய பழங்குடியினர் கட்சி கட்சிகளைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.எஸ் ஆதரவு அளித்து வருகின்றனர்
ஜோதிராதித்யா சிந்தியாவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறும் அடுத்தவராக சச்சின் பைலட் இருக்கலாம் என்பதற்கான மிகப்பெரிய அறிகுறி இதனை கூறப்படுகிறது. சச்சின் பைலட் இன்று திங்கள்கிழமை பாஜக தலைவர் ஜேபி நாடாவை சந்திக்க வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி சென்று இருந்த சச்சின் பைலட்டை சோனியா காந்தி ராகுல்காந்தி சந்திக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.